2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணியை வரும் மே 5-ம் தேதி மேற்கொள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
824 பக்கங்களில் 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி சிறப்பு நிதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கூறியதாவது: "குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்னை நேரடியாக எதிர் கொள்ளும் நேரம் வந்து விட்டது. இப்போதைக்கு கால அவகாசம் அளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை; ஆனால் வாக்குமூலங்களை பதிவு செய்ய தொடங்கிவிட்டால் அதை நிறுத்தக்கூடாது. புல்லட் வேகத்தில் எனக்கு பதில்களை அளிக்க வேண்டும். வாக்குமூலம் பதிவு ஆரம்பித்த பிறகு அது எந்தவித இடைவெளியும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்படக் கூடாது எனவும் நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.
வழக்கறிஞர்கள் வாதம்:
ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, கேள்விகளை படிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் மே-5 க்கு வாக்குமூலங்கள் பதிவை ஒத்திவைக்குமாறும் அதன் பிறகும் கூடுதல் கால அவகாசம் நிச்சயம் கோரப்படாது என்றும் தெரிவித்தார்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வா வழக்கறிஞரும் இதே காரணத்தை கூறி கால அவகாசம் கோரினார்.
4 மாதங்கள் போதாதா?
தொடர்ந்து பேசிய நீதிபதி, கடந்த 4 மாதங்களில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்விகள் அடங்கிய கோப்புகளை நீங்கள் முழுவதுமாக வாசித்திருப்பீர்கள். அதில் உள்ள கேள்விகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. அப்படி இருக்கும் போது அவற்றிற்கு பதிலளிக்க 4 மாதங்கள் போதாதா என குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.