காங்கிரஸ் கட்சி அதன் சின்னமான கைச் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை கோரி பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சிம்மி ஜெயின் என்பவர் ஒரு பெருநிறுவன முதலாளி ஆவார். அவர் பா.ஜ.க.வில் முக்கியத் தலைவராக இருக்கிறார். அவர் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிக் கொடிகளில் தேசியக் கொடியில் உள்ளது போன்று மூவர்ணங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதால் மக்களை உளவியல் ரீதியாகத் தூண்டிவிட்டு தங்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தேடிக் கொள்கின்றன. இது தெரியாமல் செய்யும் தவறு அல்ல. திட்டமிட்ட சதியாகும்.
அதேபோல காங்கிரஸ் கட்சி கைச் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அந்தச் சின்னம் உடலில் இருந்து தனியாக வெட்டப்பட்ட உறுப்பு போல இருப்பதால், அது மக்களை வன்முறைக்குத் தூண்டுவதாக அமையும். எனவே அந்தச் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதித்து, அதற்கு மாற்றாக வேறு ஒரு சின்னம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.