ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி கழுதை மீது ஊர்வலமாக வரச்செய்த கொடூரம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் சில இடங்களில் காப் பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன. ஜாதி மற்றும் புவியியல் அடிப்படையில் சில கிராமங்களை உள்ளடக்கி செயல்படும் இவை, சட்டவிரோத அதிகார அமைப்புகளாக உள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில், 80 வயது மூதாட்டி ஒருவரை, குழந்தைகளை கொன்று திண்ணும் சூனியக்காரி என்று காப் பஞ்சாயத்து குற்றம் சாட்டியுள்ளது. பின்னர் அவரது முகத்தில் கருப்பு சாயம் பூசி, கழுதை மீது நிர்வாணமாக ஊர்வலமாக வரச் செய்துள்ளனர்.
மேலும் அந்த மூதாட்டியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன் அவரிடம் பேசினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். பில்வாரா மாவட்டம், சவுகனான் கி காமேரி என்ற கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு குழந்தைகள் இல்லை. அவரது கணவர் 37 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் தன்னிடம் உள்ள சிறிதளவு நிலத்தை பறிக்கும் நோக்கத்தில் தன்னை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த மூதாட்டி கூறுகிறார்.
தெற்கு ராஜஸ்தானில் கடந்த 1 மாதத்துக்கு முன் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 50 வயது பெண் ஒருவரை காப் பஞ்சாயத்து நிர்வாணமாக கழுதை மீது ஊர்வலமாக வரச் செய்தது. அப்பெண் தனது கணவரின் உறவினரை கொலை செய்ததாக கூறி இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
காப் பஞ்சாயத்துகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், கிராமப்புற பகுதிகளில் காப் பஞ்சாயத்துகளின் செயல்பாடுகள் நின்றபாடில்லை.