என்னை குறைகூறி விமர்சிக்காவிட்டால் மம்தா பானர்ஜிக்கு ஜீரணம் ஆகாது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், சிலிகுரியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். புதிய ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் எதுவுமே மாறவில்லை. பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இங்குள்ள ஆட்சியாளர்கள் வெறுமனே வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபட் டுள்ளனர். அவர்கள் கூறுவது போலி மாற்றம்.
உண்மையான மாற்றம் வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள். மத்தியில் பாஜக தலைமையில் வலுவான அரசு அமைந்தால் சிறிய விஷயங்களில்கூட நேர்த்தி கடைப்பிடிக்கப்படும்.
என்னை குறைகூறி விமர்சிக்காவிட்டால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உணவு ஜீரணம் ஆகாது. முதல்வருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ அதைவிட அதிகமாக தாமரை பூத்துக் குலுங்கும் என்றார்.
தனது பேச்சின்போது சாரதா சிட்பண்ட் ஊழலையும் சுட்டிக் காட்டிய நரேந்திர மோடி, அந்த ஊழலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.