இந்தியா

கேரளாவில் முத்தப் போராட்டத்துக்கு தடையில்லை

பிடிஐ

முத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சியில் விடுதியொன்றில் முத்தமிட்ட காத லர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து கடந்த நவம்பர் 2-ம் தேதி அன்பின் முத்தம் என்ற பெயரிலான அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலையில் அவர்கள் நடத்திய முத்தப் போராட்டத்துக்கு போலீஸார் தடை விதித்து கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் தெருவில் முத்தம் என்ற பெயரில் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போராட்டக்காரர்களுக்கும், அனுமன் சேனா அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்நிலையில் முத்தப் போராட் டத்துக்கு தடை விதிக்கப் படவில்லை என்று மாநில அரசு நேற்று விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று கூறும்போது, “ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. போராட்டத்தால் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலை வந்தால்தான், அதில் மாநில அரசு தலையிட முடியும். எந்த வகையிலான போராட்டம் நடத்துவதற்கும் அரசு ஆட்சேபம் தெரிவிக்காது. அதே சமயம் இந்திய தண்டனைச் சட்டம் 285-வது பிரிவின்படி பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முத்தப் போராட்டம் விவகாரத்தில் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தை தடை செய்யும் திட்டம் ஏதும் இல்லை. அவர்கள் விரும்பிய வழியில் போராட்டம் நடத்தலாம். இவ்வாறு ரமேஷ் சென்னிதலா கூறினார்.

SCROLL FOR NEXT