இந்தியா

ஆசிரம பெண்கள் பலாத்காரம் 2 இளைஞர்கள் பிடிபட்டனர்: போலீசார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

தற்கொலை செய்துகொள்ள கடற்கரைக்கு சென்ற போது தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக உயிர் தப்பிய ஹேமலதா கொடுத்துள்ள புகார் தொடர்பாக போலீஸார் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிர மத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட பிஹார் மாநிலம் பொகாரா பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, அவரது சசோதரிகள் ஜெயஸ்ரீ, அருணா ஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதித்தா மற்றும் அவர்களது பெற்றோர் பிரசாத், சாந்தி தேவி ஆகியோர் கடந்த 18-ம் தேதி அதிகாலை தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றனர். அங்கு குடும்பத்துடன் கடலில் குதித்தனர்.

அதில் அருணா ஸ்ரீ, ராஜ்ய ஸ்ரீ, சாந்தி தேவி ஆகியோர் உயிரிழந்தனர். ஹேமலதா உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹேமலதா தன்னை 2 பேர் பாலியல் பலாத் காரம் செய்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் காலாப்பட்டு போலீஸில் புகார் கொடுத்தார்.

இதற்கிடையே ஹேமலதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் உடலில் இல்லை என தெரிவித்தனர். இதனால் குழப்பம் நிலவியது.

ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து காலாப்பட்டு பகுதியில் உள்ள மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச் சாவடியை சேர்ந்த ராஜா (35), விஜயகுமார் (32) ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வரதராஜனிடம் கேட்ட போது: ‘‘ஹேமலதா புகார் தொடர்பாக 2 நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்களுக்கு மருத்துவ பரி சோதனை எதுவும் நடத்த வில்லை. தற்போது அது தொடர்பாக எதுவும் கூற முடியாது’’ என்றார்.

SCROLL FOR NEXT