இந்தியா

மாநில எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள்: செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர போலீஸ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

செம்மர கடத்தலை முற்றிலுமாக தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் அருகே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆந்திர போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

திருப்பதியில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

ஆந்திர மாநிலம் தற்போது இரண்டாக பிரிந்த நிலையில், திருப்பதி நகரம் அனைத்து துறையிலும் பெருமளவு வளர்ச்சி பெரும் நகரமாக உருவாகி வருகிறது.

சர்வதேச விமான நிலையம், தொழிற்சாலைகள், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை அமைய உள்ளன. மேலும் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் திருப்பதிக்கு சாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் தற்போது கிழக்கு காவல் நிலையத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை இங்கிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இது போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் உதவும். மேலும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து தமிழகம், கர்நாடகம் வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க ஆந்திரா-தமிழகம், ஆந்திரா-கர்நாடகா ஆகிய மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதன் மூலம் குற்றங்களை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு டி.ஜி.பி. ராமுடு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின், சித்தூர் எஸ்.பி. ராமகிருஷ்ணா, திருப்பதி நகர எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் மாநில டி.ஜி.பி. ராமுடு, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

SCROLL FOR NEXT