இந்தியா

கவர்ச்சி நடிகைகள் பாலியல் தொழிலாளிகளா?- இந்து அமைப்பு தலைவர் யோசனையால் சர்ச்சை

பிடிஐ

திரைப்படங்களில் குத்துப் பாடல் காட்சிகளுக்கு ஆபாசமாக உடை அணிந்து நடனமாடும் கவர்ச்சி நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேசத்தின் இந்து அமைப்புத் தலைவர் ஒருவர் யோசனை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில இந்து மகாசபையில் பொது செயலாளரான நவீன் தியாகி, "திரைப்படங்களில் ஆபாச உடை அணிந்து குத்துப் பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், பள்ளி மாணவிகள் குட்டைப் பாவடை, ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய கூடாது என்றும், பள்ளிச் சிறுமிகள் செல்போன்கள் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "திரைப்படங்களில் குத்துப் பாடல்களில் கவர்ச்சி நடிகைகள் ஆபாசமாக நடனமாடுகின்றனர். அவர்கள் தங்களது ஆடைகளை தங்களது தொழிலுக்காக குறைக்கின்றனர். பாலியல் தொழிலாளர்கள் தங்களது செயல்களுக்காக ஊதியம் பெறுகின்றனர். அதுபோல அந்தக் கவர்ச்சி நடிகைகளும் தங்களது ஆபாச நடனத்துக்காக ஊதியம் பெறுகின்றனர். ஆகவே இவர்களையும் பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும்.

இவர்கள் தங்களது செயலின் மூலம் சமுதாயத்தையே சாக்கடையாக்குகின்றனர். இந்த விவகாரத்தை நான் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல இருக்கிறேன்" என்றார்.

லலிதா குமாரமங்கலம் கண்டிப்பு

நவீன் தியாகியின் இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சிகள் பலவும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தியாகியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம், "தியாகி அவரது பிற்போக்குத்தன மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளார். ஆபாசமாக நடனமாடும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிப்பவர்களிடம் திருப்பி ஆயிரம் கேள்விகளை எழுப்பலாம்.

ஆபாசமாக நடனமாடும் பெண்களை கண்டு ரசிக்கும் ஆண்களை எந்தப் பெயரில் அழைப்பது என்பதை யாராவது விளக்க வேண்டும். இந்த விவகாரத்தை அவர் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றால், அவர்களை அங்கு எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் எனக்கும் நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற பொருத்தமற்ற கருத்துக்களை உச்ச நீதிமன்றம் நசுக்கி தூக்கி எறிந்து விடும்" என்றார்.

காங்கிரஸ் அதிர்ச்சி

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான ரந்தீப் சுர்ஜீவாலா கூறுகையில், "தியாகியின் கருத்து அதிர்ச்சிக்குள்ளாக்க செய்துள்ளது. இவர்கள் பல நூற்றாண்டுகள் பின்தங்கிய நிலையில் யோசிக்கின்றனர் என்பதை சமூகம் புரிந்து கொண்டு விழித்தெழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கிடையே நவீன் தியாகியின் கருத்து முற்றிலும் தவறானது என்று இந்து மகாசபையின் தேசிய செயலாளர் சுவாமி சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மேலும் நவீன் தியாகியின் கருத்து குறித்த விவரம் தெரியாது என்றும், இது குறித்து உத்தரப் பிரதேச இந்து மகாசபையிடம் ஆலோசிப்பதாகவும் சுவாமி சக்கரபாணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT