இந்தியா

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: சிபிஐ விசாரணை வலையில் பி.சி.பாரக்

செய்திப்பிரிவு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டின் முறைகேடு விவகாரம் தொடர்பாக, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் பி.சி.பாரக்கிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

பி.சி.பாரக் உடன் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளிடமும் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒடிசா மாநிலத்தில் 2 நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாக, பிரபல தொழிலதிபரும், ஆதித்ய பிர்லா குழும நிறுவனங்களின் தலைவருமான குமாரமங்கலம் பிர்லாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

முன்னதாக, ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரிச் சுரஙக உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் பிர்லா, நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் உள்ளிட்டோர் மீது சமீபத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதனையடுத்து, தான் குற்றச்சதி புரிந்தவர் என்றால், அத்துறையை வைத்திருந்த பிரதமரும் விசாரிக்கப்பட வேண்டியவரே என்று பாரக் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கரிச் சுரங்கத் துறை, பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுவதால், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

இதனிடையே, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில், திரைமறைவில் நடந்தவற்றை பட்டியலிட்டு, அத்துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் நூல் எழுதிய நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT