அசாம் பழங்குடியின மக்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு, அருணாச்சல பிரதேச எல்லையில் இருக்கும் அசாமின் சோனித் பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த கண்மூடித்தனமாக தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் அருணாச்சல பிரதேச - அசாம் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அசாமில் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை குறிப்பிட்டு சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் மத்திய அரசை கண்டித்து தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "அசாமில் பல ஆண்டுகளாக வன்முறைகளும் அத்துமீறல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்கும் எந்த தலைமையும் அந்த மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் இல்லை, அவர்கள் நலனுக்காக செயல்படவும் இல்லை.
ஏனென்றால் அசாம் மாநில மக்களின் துயரங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவது குறித்து யாரும் கவலை கொள்வதும் இல்லை. அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக அத்துமீறி நுழையும் வங்கதேசத்தவர்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் தான் அசாம் போன்ற மாநிலங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் பேரிழப்பை சந்திக்க நேரிடுகிறது.
1971-லிருந்து அசாம் மாநில மக்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு யாரும் முடிவு கொண்டு வர தயாராக இல்லை. ஆட்சியாளர்கள் அனைவரும் அவர்களது அரசியல் சுயநலத்தில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். வங்கதேசத்தவர்களை அத்துமீறி உள்ளே நுழைய அனுமதித்து வாக்குகளை வாங்கியவர்கள், அதற்கு பின்னர் கூட தங்களது செயலுக்காக வருந்தவில்லை. வட கிழக்கு மாநிலங்களின் நிலை குறித்து இங்கு யாருக்கு கவலை இல்லை" என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.