சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் குறித்து உடனுக்குடன் எஸ்.எம்.எஸ். வழியாக எச்சரிக்கை விடுக்கும் நடைமுறைக்கான புதிய திட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படும் இன்று மத்திய அரசு சார்பில் நாடெங்கிலும் பல புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் டெல்லியில் நல்லாட்சி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வானிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றை குறித்த எச்சரிக்கைகள் இனி செல்ஃபோன் வழியாக மீனவர்கள் அறிந்துகொள்ளவதற்கான முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த திட்டம் குறித்து கிராமங்கள் முதல் நாடெங்கிலும் உள்ள மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெற உதவிடும்.
இந்த திட்டம் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைக்கப்பட்டு அடுத்த ஓர் ஆண்டில் செயல்முறைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று இதனை துவக்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.