உத்தரப் பிரதேச மாநிலம் ஆக் ராவில் கடந்த வாரம் 100 முஸ்லிம் கள் மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று பிரச்சினை எழுப்பியதால் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியது.
மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த பிரச்சினையை எழுப்பி பேசிய தாவது:
கட்டாய மதமாற்றம் என்பது சட்டத்துக்குப் புறம்பானது மட்டு மல்லாமல், அது மதக்கலவரத் துக்கும் வழிவகுக்கும். ஏழை முஸ்லிம்களை ஆசை காட்டி இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் வேறு சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
கிறிஸ்தவர்களும் மத மாற்றம்
வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்றும், உபியின் அலிகர் நகரில் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள் ளனர். பொதுமக்களின் சொத்து மற்றும் மத சுதந்திரத்தை பாது காப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் குரல் கொடுக்க வேண் டும் என மாயாவதி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, இந்தப் பிரச்சி னையில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதுபோல, அரசியலமைப்பு சட்டம் மதிக்கப்பட வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்தர மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியும் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஆக்ராவைச் சேர்ந்தவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சருமான ராம் சங்கர் கத்தரியா, “அது கட்டாய மத மாற்றம் அல்ல. அவர்கள் தாமாக முன்வந்து மதம் மாறிக் கொண்ட தாக எனக்கு தகவல் கிடைத் துள்ளது” என்றார்.
மத்திய அரசு பதில்
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியாதவது:
நாட்டில் மத நல்லிணக்கத்தை செயல்படுத்த மத்திய அரசு கடமைப் பட்டுள்ளது. இதில், அரசியல் காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெயர் குறிப்பிடப் படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து ஆக்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையான இது, உபி மாநில அரசின் வரை முறைக்கு உட்பட்டது. இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என நக்வி தெரிவித்தார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ் கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக, இரு சமூகங் களுக்கு இடையே பகையை வளர்ப்பது மற்றும் மோசடி ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட வர்கள் கைது செய்யப்படுவார்கள். கட்டாய மத மாற்றத்தை உபி அரசு அனுமதிக்காது” என்றார்.
மக்களவையில்…
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது, இந்த செய்தி வெளியான நாளிழை காண்பித்து, ‘ஆக்ராவில் என்ன நடக்கிறது’ எனக் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு முன்கூட்டியே அனுமதி பெறவில்லை எனக் கூறி மக்களவை தலைவர் சுமித்ரா மஹாஜன் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதனால் சிறிது நேரம் அவையில் அமளி நிலவியது.
மதம் மாற்ற சடங்கு
டெல்லிக்கு மிக அருகில் உள்ள உ.பி.யின் ஆக்ராவில் 57 முஸ்லிம்கள், கடந்த திங்கள் கிழமை இந்துவாக மதம் மாறினர். இதற்காக அவர்கள், தலையில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி களுடன் அமர்ந்து யாகம் நடத்திய செய்தி டிவி சேனல்களில் வெளி யானது. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு ஆக்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மதம் மாறியவர் களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களுக்கு ஆதார் மற்றும் ரேஷன் அட்டை பெற்றுத் தருவதாகக் கூறப்பட்டது. எங்களைப் பற்றி போலீஸாருக்கு கவலை இல்லை. நாங்கள் மிகவும் ஏழைகள்” எனத் தெரிவித்தார்.
இவர்களுக்கு பஜ்ரங் தளம் மற்றும் தரம் ஜாக்ரன் சமிதி சார்பில் மதமாற்ற சடங்கு செய்து வைத்த அமைப்பாளர்களில் ஒருவரான ராஜேஷ்வர் சிங் கூறும்போது, “சுமார் 30 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களாக மாறியவர்கள்தான் இப்போது தங்கள் இந்து மதத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இதே போல் அலிகாரிலும் பாஜக எம்பியான யோகி அதித்யநாத் தலை மையில் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்துவாக மாற உள்ளனர்” என்றார்.