ஜார்க்கண்டின் புதிய முதல்வராக பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் (60) இன்று பதவியேற்றார். ஜார்க்கண்டில் பழங்குடியினத்தை சாராத முதல் முதல்வர் இவர் ஆவார்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு கூட்டணி 42 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, பாஜக மேலிட பார்வையாளர் ஜே.பி.நட்டா தலைமையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முதல்வராக ரகுவர் தாஸை கடந்த வியாழக்கிழமை தேர்ந்தெடுத்தது.
இதனைத் தொடர்ந்து மாநில ஆளுநர் சையது அகமது இன்று (ஞாயிற்றுகிழமை) ரகுவர் தாஸுக்கு முறைபடி பதவி பிரமானம் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழா ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா கால்பந்து மைதானத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. அவருடன் பாஜக-வைச் சேர்ந்த 4 அமைச்சர்களும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஓர் அமைச்சரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களது பயணம் டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
விழாவில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, வெங்கய்ய நாயுடு மற்றும் பல மாநிலங்களின் பாஜக முக்கியத் தலைவர்களும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.