இந்தியா

நகை வியாபாரி கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 3 கிலோ தங்கம், பணம் கொள்ளை

என்.மகேஷ் குமார்

நகை வியாபாரியின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, 3 கிலோ தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்றது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தர்மாவரம் அஞ்சுமன் சர்க்கிள் பகுதியில் அல்லாபகாஷ் ஜுவல்லரி எனும் நகைக்கடை உள்ளது. இதன் உரிமையாளர் காஜா ஹுசைன், நகைகளை விற்பனை செய்வதுடன் கர்நாடக மாநிலத்தில் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க பிஸ்கெட்டுகள், தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்க பணம் ஆகியவைகளை ஒரு பையில் எடுத்து கொண்டு, தனது பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பின்னால் பைக்குகளில் வந்த 6 பேர் காஜா ஹுசைன் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவினர். இதில் நிலைதடுமாறிய அவரிடமிருந்து தங்கம் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பினர்.

காஜா ஹுசைனின் கூச்சலால் ஓடி வந்த பொது மக்கள், பைக்குகளில் செல்லும் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க துரத்தியபடி ஓடினர். இதில் ஒரு பைக்கில் இருந்த மூவர் பைக்கை விட்டு தப்பி ஓட முயன்றனர்.

இதில் கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (28) என்பவர் பொதுமக்களிடம் சிக்கினார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். வெங்கடேஷை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இவன் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 3.5 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

2 கிலோ தங்கம் மீட்பு

தப்பிய கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் பெல்லாரி, அனந்தபூர், தர்மாவரம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், தர்மாவரத்தில் பதுங்கி இருந்த 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கிலோ தங்கம் மற்றும் ரூ. 2.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT