பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் 10 கோடி வங்கிக் கணக்குகள் என்ற முதல் கட்ட இலக்கை வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே எட்டி விட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜன்தன் திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 26-ம் தேதிக்கு முன்பாக 10 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 26-ம் தேதி நிலவரப்படி 10.08 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், கடந்த 22-ம் தேதி வரை 7.28 கோடி ரூபே அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கி கள் வழங்கியுள்ளன. நிதித் துறை இணைச் செயலாளரும், ஜன்தன் திட்டத்தின் திட்ட இயக்குநருமான அனுராக் ஜெயின் தலைமையில் வங்கியாளர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில், தனியார், பொதுத்துறை வங்கிகளின் செயல் இயக்குநர்கள், இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ), தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்பிசிஐ), பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையம் (யுஐடிஏஐ) ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பிராந்திய கிராம வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூபே அட்டைகளை வழங்க உறுதி யளிக்கப்பட்டது. மேலும், வங்கிக் கணக்கு புத்தங்களை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கவும் வங்கிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
15 நாட்களில் எல்ஐசி பணம்
மேலும் வங்கிகளும், எல்ஐசி நிறுவனமும் கோருதல் படிவங்களை தங்களது இணைய தளத்தில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஆயுள் காப்பீட்டுத் தொகை கோரும் விண்ணப் பங்களை எல்ஐசி நிறுவனம் 15 நாட்களுக்குள் நிறைவு செய்து உரியவர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எக்காரணம் கொண்டும் பணம் வழங்குவதற்கான அவகாசம் 30 நாட்களுக்கு மிகக் கூடாது என எல்ஐசி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.