சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் ராமலிங்க ராஜுவுக்கு பொருளாதார அமலாக்கப் பிரிவு நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனையோடு ரூ. 10.3 லட்சம் அபராதம் விதித்தது. இவரது சகோதரர் ராம ராஜு மற்றும் 8 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
ஏமாற்றுதல், குற்ற சதி, மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களுக்காக இவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய ஊழல் மோசடி காரணமாக ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி வி. னிவாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 34 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ராமலிங்க ராஜு ஜாமீனில் விடுதலையானார்.
கார்ப்பரேட் உலகில் மிகப் பெரிய அளவுக்கு (ரூ. 14 ஆயிரம் கோடி) நிகழ்ந்த மோசடி இது என கூறப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரித்தது. அமலாக்கத் துறை யினர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
சிபிஐ சுமத்தியுள்ள குற்றச் சாட்டுகள் மீதான தீர்ப்பு இம் மாதம் வெளியாக உள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறு வனத்தை மஹிந்திரா நிறுவனம் வாங்கி டெக் மஹிந்திரா என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது.