கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை சிறை காவலர்களும், ஆண் கைதிகளும் பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 1,062 ஆண் கைதிகளும்,131 பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பெண் கைதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் 53 பெண் கைதிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், “சிறைக் காவலர்களும், வார்டன்களும் பெண் கைதிகளை பலாத்காரம் செய்கின்றனர். சிறைக்கு வெளியிலிருந்து வரும் சிலருடனும், பணக்கார ஆண் கைதிகளுடனும், ரவுடிகளுடனும் உறவு கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர்.
இதற்கு உடன்படாத பெண் கைதிகளை அடித்து சித்ரவதை செய்கின்றனர். எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுத்து நிறுத்தாவிடில் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம்” என கூறப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இதுதொடர்பாக அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள், சமூக நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறும்போது, “இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து உரிய விசாரணை நடத்துமாறு பெங்களூரு மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.