ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கர்நாடக முதல் வர் சித்தராமையாவை பெங்க ளூருவில் உள்ள அவரது கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, துங்கபத்ரா ஆற்றின் கால்வாயை புனரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் இரு மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தராமையாவிடம்,ஆந்திராவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆதலால் துங்கபத்ரா ஆற்றில் இருந்து ஆந்திராவுக்கு 32 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் இந்த ஆண்டு துங்கபத்ராவில் இருந்து ஆந்திராவுக்கு கூடுதல் நீர் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சித்தராமையா உறுதி
இந்த சந்திப்புக்கு பிறகு சித்தரா மையா செய்தியாளர்களிடம் பேசும் போது,'' ஆந்திர முதல்வர் துங்கபத்ரா நீர் பங்கீடு தொடர்பாக பேசினார்.இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். துங்கபத்ரா ஆற்றின் கால்வாயை புனரமைப்பது இரு மாநில மக்களுக்கும் நன்மை தரும்.
துங்கபத்ரா நீர் ஆந்திராவை முழுமையாகவும்,விரைவாகவும் சென்றடைய கால்வாயை சில இடங்களில் புதியதாக கட்டுவது, சில இடங்களில் புனரமைப்பது, கான்கிரீட் போடுவது, புதிய குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற் கொள்ள முடிவெடுத்துள்ளோம்.இந்த பணிகளை இரு மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும்''என்றார்.