ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
காஷ்மீரின் பண்டிப்போரா நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
காஷ்மீருடன் காங்கிரஸ் கட்சிக்கு நூற்றாண்டு கால உறவு உள்ளது. இந்த உறவே என்னை காஷ்மீருக்கு மீண்டும் வரச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வெள்ள நிவாரணப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததே இதற்கு காரணம். உங்கள் கவலையை போக்க மத்திய அரசு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. பாஜக தலைவர்கள் இங்கு வருகிறார்கள், வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநில அரசு ரூ.44 ஆயிரம் கோடி கேட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை யின்போது இங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி வெறும் ரூ.745 கோடியை நிதியுதவியாக அறிவித்தார்.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் சேனாப் பள்ளத்தாக்கு பகுதிகளில் பிராந்திய கவுன்சில்கள் அமைக்கப் படும் என நாங்கள் உறுதி அளித்தோம். அவ்வாறே அதை நிறைவேற்றினோம். இம்மாநிலத் தில் கூட்டணி அரசில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்த போதிலும் நாங்கள் விரும்பிய அளவுக்கு இம்மாநில மக்களுக்கு பணியாற்ற முடியவில்லை” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சைபுதீன் சோஸ் பேசும்போது, “பாஜகவுக்கு வாக்களித்தால் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வாக்களித்ததாகவே அர்த்தம். பிரதமர் மோடி யாருடனும் ஆலோ சிக்காமல் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுக் கொள்கையை கடைபிடிக் கிறார். இதன் மூலம் அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறார்” என்றார்.