உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதி மக்கள் லாரியிலிருந்து சிதறிய பீர் பானத்தை இலவசமாக அருந்தி, ஜெர்மனி பீர் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பீர் பாட்டில்களை ஏற்றிய லாரி ஒன்று கோண்டா நகரிலிருந்து மீரட் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவில் பரேலியில் உள்ள டெல்லி-லக்னோ நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநர் நரேஷ் குமார் மற்றும் உதவியாளராக வந்த அவரது சகோதரர் நீரஜ் குமார் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய அப்பகுதி கிராம மக்கள், அங்கு யாரும் இல்லாததால் இலவச பீர் ‘பார்ட்டி’யில் இறங்கி விட்டனர். ஒவ்வொருவரும் முடிந்தவரை பீர் பானத்தை குடித்தனர். அத்துடன் பாட்டில்கள், பாத்திரங்கள் மற்றும் பக்கெட்டுகளில் பீர் பானத்தை நிரப்பிச் சென்றனர். போதை ஏறிய சிலர் ஆரவாரம் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து ஒரு வழிப்போக்கர் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் அங்கு வந்தனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சி.பி.கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சுனில் குமார் சிரோஹி கூறும்போது, “விபத்துக்குள்ளான லாரியிலிருந்து அவ்வழியாக சென்றவர்களும் பீர் பாட்டில்கள் கொண்ட அட்டை பெட்டிகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அப்போது அப்பகுதி கிராமவாசிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுமார் ஐந்து மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா
ஜெர்மனி நாட்டின் பவேரியா மாநிலம் மூனிச் நகரில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் முதல் வார இறுதி வரை 16 நாட்களுக்கு நடைபெறும் கேளிக்கை திருவிழாவின் பெயர் ‘அக்டோபர் ஃஃபெஸ்ட்’. கடந்த 1810-ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த திருவிழாவின் போது எராளமானோர் சாலை களில் திரண்டு பீர் குடிப்பது வழக்கம். இதில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது 70 லட்சம் லிட்டர் பீர் வழங்கப்பட்டன. இப்போது உலகின் வேறு பல நகரங்களிலும் இத்திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் உபிவாசிகளும் பீர் திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.