இந்தியா

டெங்கு ஒழிப்புக்காக மகாராஷ்டிராவில் சாலையை சுத்தப்படுத்தினார் சரத் பவார்

செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, ஏற்கெனவே அறிவித்தபடி மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையை சுத்தப்படுத்தினார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்.

பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டம் ஒருபுறம் பிரபலமடைந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தூய்மை திட்டத்தை செயல்படுத்தப்போவதாக பவார் அறிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பவார், டெங்கு ஒழிப்பு முயற்சியாக தனது கட்சியினர் மாநிலத்தில் தூய்மை திட்டத்தை மேற்கொள்வார்கள் என அறிவித்தார்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பாரமதி பகுதியில் சரத் பவார், அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சூலே, மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சாலையை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிராவில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சரத் பவாரின் இந்த முயற்சி மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கும் வரவேற்பு தெரிவிக்கும் மறைமுக செயல்பாடே என எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT