இந்தியா

வசதிபடைதோருக்கான சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படலாம்: அருண் ஜேட்லி சூசகம்

பிடிஐ

வசதிபடைத்தோருக்கான சமையல் எரிவாயு மானியத்தை அரசு ரத்து செய்ய முடிவெடுக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “அரசு எடுக்கும் அடுத்த முக்கிய முடிவு எல்.பி.ஜி. சிலிண்டர் மானியம் குறித்த முடிவாகவே இருக்கும். சமையல் எரிவாயு மானியம் பெற உரிமையுள்ளவர்கள் யார் என்பதை விரைவில் முடிவு செய்யவுள்ளோம். இந்த முடிவுகள் எங்கள் திட்டத்தில் உள்ளன” என்றார்.

தற்போது மானிய விலையில் ரூ.414 (டெல்லியில்) என்ற விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைத்து வருகின்றன. அதற்கும் மேல் தேவை ஏற்பட்டால் 14.2 கிலோ உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.880-க்கு கிடைத்து வருகிறது.

"நமது தலைமை முடிவெடுக்கும் தீர்மானத்துடன் செயல்பட்டால், மிகவும் சிக்கல் வாய்ந்த முடிவுகளும் எளிமையாக அமையும்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, அலைக்கற்றை ஒதுக்கீடு, அல்லது இயற்களை வளங்கள் அல்லது டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் விலை ஆகியவற்றில் முடிவெடுக்க இப்போது ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் தோன்றின. ஆனால் புதிய அரசு இவற்றில் முடிவெடுக்க கால விரயம் செய்வதில்லை” என்றார் அருண் ஜேட்லி.

அதே போல் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை அமல்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தயார் நிலையில் உள்ளன என்றும், திங்களன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இது தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26%-லிருந்து 49% ஆக அதிகரிக்கும் முடிவும் விரைவில் தீர்மானிக்கப்படும் என்றார்

SCROLL FOR NEXT