ஹைதராபாத்தில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட தொழிலதிபரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்த முயன்றார். தொழிலதிபர் சுதாரித்துக் கொண்டதால் ஏகே 47 ரக துப்பாக்கியை விட்டுவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார் இந்த சம்பவத்தால் ஹைதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் துணைத் தலைவர் நித்யானந்த ரெட்டி (50). ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது சகோதரர் பிரசாத் ரெட்டியுடன் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கேபிஆர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். காலை 7.15 மணியளவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்ட அவர், தனது ஆடி காரில் ஏறி வீட்டுக்குப் புறப்படத் தயாரானார்.
இதற்கிடையே இவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் இவரது காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார். பின்னர் அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால், நித்தியானந்த ரெட்டியை குறி பார்த்தபடி, காரை தான் சொல்லும் இடத்துக்கு செலுத்துமாறு மிரட்டி உள்ளார்.
உடனே சுதாரித்துக் கொண்ட தொழிலதிபர், தன்னிடமிருந்த பிஸ்டலை எடுத்து, ஏகே 47 துப்பாக்கியை தட்டி விட்டுள்ளார். இதனால் காரில் இருந்தபடி 8 ரவுண்ட் வரை சுடப்பட்டது. இதில் காரின் முன் கண்ணாடியில் 7 தோட்டக்களும், கதவில் ஒரு தோட்டாவும் பாய்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கினர். இதைக் கண்ட நித்தியானந்த ரெட்டியின் சகோதரர் ஓடி வந்து மர்ம நபரை பிடிக்க முயன்றார். அவரின் கையைக் கடித்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். ஆனால் காரிலேயே ஏகே 47 துப்பாக்கியை விட்டுச் சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார், ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் மஹேந்தர் ரெட்டி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலிருந்த 8 தோட்டாக்களையும், ஏகே 47 துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த ஏகே 47 துப்பாக்கி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் காணாமல் போன துப்பாக்கி என தெரிய வந்தது. இதுகுறித்து புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காணாமல் போன துப்பாக்கி மர்ம நபருக்கு எப்படி கிடைத்தது, அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து நித்யானந்த ரெட்டி கூறும்போது, “மர்ம நபர் சுமார் 5.3 அடி உயரம் கொண்டவராக உள்ளார். அவரை என்னால் அடையாளம் காட்ட முடியும். எனக்கு தொழில் ரீதியாக எதிரிகள் யாரும் இல்லை. என்னை கடத்தவே சிலர் திட்டமிட்டுள்ளதாக நினைக்கிறேன்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகார ராவ், நேற்று சட்டப்பேரவையில் கூறும்போது, “இது துரதிருஷ்டவசமான சம்பவம். இதுகுறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையே, தெலங் கானாவில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விட்டதற்கு இந்த சம்பவமே சாட்சி என காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன.