கடந்த மாதம் கேரளாவின் காபி ஷாப் மீது தாக்குதல் நடத்தியதாக அம்மாநில பாஜக இளைஞர் அணி தலைவர் கே.பி. பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் கொச்சியில் உள்ள காபி ஷாப் ஒன்றில் காதலர்கள் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகக் கூறி, பாஜக இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் அந்த ஷாப்பை தாக்கி கடுமையாக சேதப்படுத்தினர். பி.டி.உஷா சாலையில் அமைந்துள்ள தனியார் காபி ஷாப் தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோழிக்கோடு காவல்துறை இந்த தாக்குதல் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்டுள்ள கேரள பாஜக இளைஞர் அணி தலைவர் கே.பி. பிரகாஷ் கைது செய்யப்பட்டதாக மலப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அவர் மீது சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்தது, கலவரம் நடத்தியது, பயங்கர ஆயுத உபயோகம், முன்நோக்கத்தோடு திட்டமிட்ட தாக்குதல், கிரிமினல் மிரட்டல் என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக யுவ மோர்ச்சா அணியினர் மீது காதல் முத்தப் போராட்டம் (Kiss of Love) நடத்திய மாணவர் அமைப்பினர், அவர்களது ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கியது, அநாகரீகமாக மாணவிகளை சித்தரித்து இணையத்தில் பரப்பியது, தங்களது காதல் முத்த போராட்டத்தின்போது பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் கே.பி. பிரகாஷ் முன்ஜாமீன் கோரியிருந்தார்.