போபால் விஷவாயுக் கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பெண்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு தற்போது உயிருடன் இருப்பவர்கள் தரப்பில் 5 பெண்கள், தண்ணீரும் அருந்தாத உண்ணா விரத்தை டெல்லியில் கடந்த 10-ம் தேதி தொடங்கினர். இந்நிலையில் இவர்களை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் வெள்ளிக் கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட 2 கோரிக்கைகளை மத்திய அமைச்சர் ஏற்றுக்கொண்டதால் வெள்ளிக்கிழமை மாலை இப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அப்பெண்கள் தரப்பில் சனிக்கிழமை வெளியான செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
இதனிடையே ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இழப்பீட்டை உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது உயிருடன் இருப்பவர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி யாகும். இந்த உறுதிமொழியை வரவேற்கிறோம். எனினும் இதை நடைமுறைப்படுத்தப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.
மத்தியப்பிரதேசம் போபாலில் 1984ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி யூனியன் கார்பைடு ரசாயன ஆலை யிலிருந்து மெதில் ஐசோசயனைட் என்ற விஷவாயுக் கசிந்தது. 40 டன் அளவுக்கு வெளியேறிய இந்த விஷ வாயுவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோருக்கு கண்பார்வை பாதிப்பு உட்பட பல் வேறு உடற்கோளாறுகள் ஏற்பட்டன.
இந்த விஷவாயு விபத்தால் 1994 வரையில் 25 ஆயிரம் பேர் பலியானதாக ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்) தெரிவித் துள்ளது.
விஷவாயுக் கசிவு ஏற்பட்ட சில நாட்களில் 3,500 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. ஆனால் 8000 முதல் 10 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என ஐசிஎம்ஆர் மதிப்பிட்டது.
விபத்து நடத்து 30 ஆண்டுகள் ஆனபோதிலும் இப்போதுகூட நிறைய பேருக்கு புற்றுநோய், பார்வைக் குறைபாடு, மயக்கம், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக விஷவாயுக் கசிவிலிருந்து தப்பியவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.
விஷவாயுக் கசிவு ஏற்பட்ட சில நாட்களில் 3,500 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. ஆனால் 8000 முதல் 10 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என ஐசிஎம்ஆர் மதிப்பிட்டது.