காங்கிரஸைக் காப்பாற்றுவது மட்டுமே நவீன் பட்நாயக் அங்கம் வகிக்கும் மூன்றாவது அணியின் ஒரே வேலை என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி சாடினார்.
ஒடிசா மாநிலம் வளர்ச்சியை எட்டாததற்கு, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்றும் அவர் குறைகூறினார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் முதல் முறையாக இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி பேசியது:
"உத்திரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாடி, மேற்கு வங்கத்தை ஆட்சி புரிந்த இடதுசாரிகள் அல்லது ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம் என தாங்கள் ஆளும் எல்லா மாநிலங்களையும் மூன்றாவது அணியைச் சேர்ந்த கட்சிகள் அழித்துள்ளன.
மூன்றாவது அணியில் உள்ள 11 கட்சிகளில் 9 கட்சிகள் ஏற்கெனவே காங்கிரசை ஆதரித்தவைதான். இப்போது, அக்கட்சிகள் தேர்தலுக்காக முகமூடி அணிந்துள்ளன.
காங்கிரஸைக் காப்பாற்றுவது என்ற ஒரே வேலையைத்தான் மூன்றாவது அணி செய்கிறது. அவர்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது.
நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் இன்று இருந்திருந்தால், ஒடிசா மாநிலத்தின் நிலையைப் பார்த்து மனம் ஒடிந்து போயிருப்பார்.
ஒடிசாவிலிருந்து வாழ்வாதாரத்துக்காக குஜராத் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்திருக்கும் பலரும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே.
பிஜு பட்நாயக்கிற்கு நாம் உண்மையான அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால், ஒடிசாவை வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்ற வேண்டும். நான் இங்கு தேர்தல் வாக்குறுதிகளோடு வரவில்லை. பல நல்ல நோக்கங்களுடன் வந்துள்ளேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து, நான் பதவிக்கு வந்து, ஒடிசா மாநிலம் முன்னேற்றம் காண வழிவகுப்பதற்கு, எனக்கு நீங்கள் உதவ வேண்டும்.
நானும் நவீன் பட்நாயக்கும் கடந்த 14 வருடங்களாக முறையே குஜராத் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களாக இருக்கிறோம். என் நிர்வாகத்தில் குஜராத் செழிப்படைந்துள்ளது. ஆனால், ஒடிசாவில் இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், இன்னும் ஏழை மாநிலமாக மோசமான நிலையில் நீடிக்கிறது.
பாஜக நிச்சயம் ஒடிசாவின் வளர்ச்சிக்காக உழைக்கும். அந்த வளர்ச்சியால் மாநிலத்திலிருந்து வெளியேறியவர்களும் இங்கே திரும்பி வருவார்கள். ஏழைகளின் முன்னேற்றத்திற்கே பாஜக முன்னுரிமை அளிக்கும் என உறுதியளிக்கிறேன்" என்றார் நரேந்திர மோடி.