இந்தியா

பிஹாரில் பள்ளியை தகர்த்து மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

செய்திப்பிரிவு

பிஹார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் அரசினர் பள்ளி ஒன்று தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாட்னாவில் காவல்துறை ஆணையர் ஜிதேந்திர ராணா கூறுகையில், "இன்று காலை ஜூமாயில் உள்ள போஜாயத் அரசினர் பள்ளியை சிலிண்டர் குண்டு மூலம் மாவோயிஸ்டுகள் தகர்த்தனர். கொரில்லாப்படை மாவோயிஸ்டுகளுக்கு பள்ளிகள் மீது குறிவைப்பது மிகவும் எளிதான இலக்காக இருக்கிறது. ஆனால் இது மாணவர்களை மோசமான அளவில் பாதிக்கின்றது. இத்தகைய கொடும் செயலுக்கு காரணமான மாவோயிஸ்டுகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த பள்ளியில் கடந்த சில மாதங்களாக தேர்தல் அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். பள்ளி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இனி மாணவர்கள் மரத்தின் அடியில் பாடம் படிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். ஜூமாய் பகுதி மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கருதப்படுகிறது.

இதே போல ஏப்ரல் 10-ம் தேதி லக்‌ஷிசராய் மாவட்டத்திலும் ஒரு பள்ளி தாக்கப்பட்டது. கடந்த 2 வருடங்களில் இதுவரை 12க்கும் அதிகமான பள்ளிகள் தகர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

SCROLL FOR NEXT