இந்தியா

ஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத் துறையில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகள் தளர்த்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

பிடிஐ

ஊடகம், காப்பீடு, விமானப் போக்குவரத்துத் துறை, காப்பீட்டு துறை, ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகம் ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதலாவது பட்ஜெட்டை தாக்கல்செய்தார். அதில் அவர் கூறியதாவது:

" 2018-19-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு வரவு 6 சதவீதம் அதிகரித்து 6,437 கோடி டாலராக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான அந்நிய முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சித்து வருகிறது.  

குறிப்பாக ஊடகம், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்(ஏபிஜிசி), காப்பீடு, விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்தப் பரிசீலித்து வருகிறோம்.

காப்பீட்டுத் துறையில் தற்போது 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது, இது 100 சதவீதமாக அதிகரிக்கப்படும். மேலும், சிங்கிள் பிராண்ட் ரீட்டைல் பிரிவில் விதிமுறைகளைத் தளர்த்தவும் பரிசீலிப்போம்.

அதேபோல, ஊடகத்துறையில் நாளேடுகள், வார ஏடுகள் உள்ளிட்டவைகளுக்கு 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும். அரசின் அனுமதியுடன் செய்திகள், நடப்பு விவகாரங்களைப் பிரசுரிக்கலாம். வெளிநாட்டு ஏடுகளின் இந்திய பதிப்புகளும் தொடங்க அனுமதிக்கப்படும்.

அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்று. துறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடு அவசியம் " இவ்வாறு நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார்.

SCROLL FOR NEXT