ராகுல் காந்தி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியின் சுவாமி மீது ராஜஸ்தான், தெலங்கானாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து சமீபத்தில் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அதில், ராகுல் காந்தி கோகைன் போதைப்பொருள் பயன்படுத்துபவர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் மீது கூறுவது காங்கிரஸ் தொண்டர்களின் மனதைப் புண்படுத்துவது போலாகும். ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவதற்கு சுப்பிரமணியன் சுவாமிக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர், டோங்க், புந்தி, பாரன் ஆகிய நகரங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். காங்கிரஸ் தொண்டர்களின் மனதை வேதனைப்படுத்திய சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவரும் ஜெய்ப்பூர் சட்டப்பிரிவு தலைவருமான சுஷில் சர்மா, ஜெய்ப்பூர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். சிஆர்பிசி பிரிவு 357(3)ன்படி, ரூ. ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து சர்மா கூறுகையில், "ராகுல் காந்தி குறித்து சுப்பிரமணியன் சுவாமி குறித்த கருத்துகள் நாடு முழுவதும் ஊடகங்களில் ஒளிபரப்பானது. அவரின் கருத்து ராகுல் மீதான வெறுப்பால் பேசியது. ராகுல் காந்தி எந்தவிதமான குற்றமும் செய்யாதவர். அவருக்குக் களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார.
மேலும், சத்தீஸ்கர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் அளித்த புகாரையடுத்து பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர தெலங்கானா மாநிலத்திலும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தெலங்கானா இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.அனில்குமார் யாதவ், செய்தித் தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு உள்ளிட்ட தலைவர்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அபிட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், " பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி ராகுல் காந்தி குறித்து அவதூறாக, ஆதாரமற்ற வகையில் பேசியுள்ளார் என்றும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகள் மிகவும் தரக்குறைவானவை எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் கூறும் கருத்துகள் தவறானவை என்று தெரிந்திருந்தும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார் எனப் புகாரில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.