இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்: விரைவில் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது

ஐஏஎன்எஸ்

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல் காந்தி பதவி விலகியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்க அடுத்த சில நாட்களில் செயற்குழு கூடுகிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

ஆனால், ராகுல் காந்தி பிடிவாதமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் இருந்து வருகிறார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்கக் கோரி பல்வேறு மாநிலத் தலைவர்கள், தேசிய அளவில் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துவிட்டனர். கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சென்று ராகுல் காந்தியைச் சந்தித்து சமாதானம் செய்தனர்.

அப்போது 5 முதல்வர்களின் கோரிக்கையையும் ராகுல் காந்தி நிதானமாக கேட்டுக்கொண்டதாகவும், தலைவர் பதவியில் தொடர்வார் ராகுல் என்று நம்புவதாகவும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்ய அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "முன்னாள் மத்திய அமைச்சரும், மகராஷ்டிராவைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் ஷிண்டே அல்லது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இருவரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன" எனத் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலப் பொறுப்பாளர் ஷிண்டே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செயலாளர் சோனல் படேல், எம்.பி. மணிக்ரோ தாக்ரே, எம்.பி. ஹூசைன் தல்வாய், முகுல் வாஸ்னிக், ஆகியோர் ராகுல் காந்தியை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசி, மகாரஷ்டிரா தேர்தல் குறித்துப் பேசினார்கள்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொதுச்செயலாளர்கள், செயலாளர்களையும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT