மேகாலயாவில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட அனுமதித்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை மாநில அரசு டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அசாம் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.கஹோட்டி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து நிலக்கரி சுரங்கங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்தக் குழுவினர் மேகாலயா மாநிலத்தில் மட்டும் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக 2,400 நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான சுரங்கங்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. சுரங்கங்களுக்கு குத்தகையும், ஏலச்சான்றும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல், மேகாலய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 4-ம்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதில்," சட்டவிரோதமாகச் செயல்படும் நிலக்கரி சுரங்கங்களை மூடுவதற்கும் தடை செய்வதற்கும் மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது. ஆதலால், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அடுத்த இரு மாதங்களில் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகல் அசோக் பூஷன், கே.எம். ஜோஸப் ஆகியோர் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், " தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு டெபாசிட் செய்ய வேண்டும். சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியைப் பறிமுதல் செய்து கோல் இந்தியாவிடம் அளித்தால், அவர்கள் ஏலத்தில் விட்டு பணத்தை அளிப்பார்கள். மேலும், சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களை நடத்தியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அபராதத் தொகையை செலுத்த வேண்டும் " என உத்தரவிட்டனர்.
கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் உள்ள சான் நிலக்கரி சுரங்கத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 2 பேரின் உடல்கள் மட்டுமே தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.