இந்தியா

கேரளா என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?-தலைமைச் செயலாளர் கைது செய்யப்படுவார்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

பிடிஐ

கேரள மாநிலத்தில் மலங்காரா தேவாலய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாத கேரள அரசை கடுமையாகக் கண்டித்த நீதிபதிகள், உங்கள் தலைமைச் செயலாளரை சிறையில் அடைக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, 1934-ம் ஆண்டு மலங்கரா தேவாலய விதிப்படி, 1,100 தேவாலயங்களும் ஆர்த்தடாக்ஸ் பிரிவினரிடம்தான் ஒப்படைக்க வேண்டும். ஜேகோபைட் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் தடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. இதை கேரள அரசு உரிய பாதுகாப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்  உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி இருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கேரள மாநில அரசு வழக்கறிஞரை கடுமையாகச் சாடினாரகள்.

"மலங்கரா தேவாலயத்தின் கீழ் இருக்கும் 1,100 பார்சிய தேவாலயங்களை ஆர்த்தடாக்ஸ் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க கடந்த 2017-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை உங்கள் தலைமைச் செயலாளர் ஏன் பின்பற்றவில்லை.

நாங்கள் அளித்த தீர்ப்பை உங்கள் தலைமைச் செயலாளர் கிண்டல் செய்கிறாரா? உங்கள் தலைமைச் செயலாளரிடம் போய் சொல்லுங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடக்க நினைத்தால், ஒவ்வொருவரையும் நாங்கள் இங்கு அழைக்க வேண்டியது இருக்கும். கேரளா என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?. உங்களின் செயல்பாடு நீதிமன்றத்தின் நீதிபரிபாலன முறையைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாவிட்டால், கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சிறையில் அடைக்கப்படுவார். இந்த விவகாரத்தின் தீவிரம், முக்கியத்துவத்தை புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறோம். உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது" என நீதிபதிகள் எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT