இந்தியா

ஓபிஎஸ் உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேருக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி  நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு, சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். இதனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக  சட்டப் பேரவையில்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து அவர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, திமுக கொறடாவும், எம்எல்ஏவுமான சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சக்ரபாணி, தங்க தமிழ்ச் செல்வன் ஆகிய இருவரும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வில் பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

பின்னர் நீதிபதி சிக்ரி ஓய்வுபெற்றதை அடுத்து வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை குறித்து பல நேரம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மனுவை பரிசீலனைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, பி.ஆர். காவாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதனையடுயடுத்து, இந்த வழக்கில் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் வழக்கின் தன்மை மற்றும் ஏற்கெனவே நடந்த விசாரணை தொடர்பாக விளக்கினார். மேலும் 3 எம்எல்ஏக்கள் வழக்கும் இதே போன்றது. எனவே அதையும் சேர்த்து விசாரிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பு அரியமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதத்தில், “இந்த இரு வழக்குகளும் வேறு வேறு தன்மை கொண்டது. குறிப்பாக, 3 எம்எல்ஏக்கள் விவகாரம் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மூவரும் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும்.

மேலும் 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் மூவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டதால் அந்த விவகாரம் காலாவதியாகி விட்டது. எனவே சபாநாயகர் நடவடிக்கை எடுக்காலாம் என்ற நிலை வந்து விட்டது. எனவே வழக்கை தள்ளுபடி செய்யலாம்” என தெரிவித்தார்.

வழக்கு செல்லாது என்று கூறுவது தொடர்பான ஆவணங்கள் உள்ளனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கு செல்லாததாகிவிட்டது என்பதை உத்தரவில் தெரிவிப்பதற்காக வழக்கை விசாரிக்க வேண்டும். எனவே விசாரிப்போம் என தெரிவித்தனர்.

சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம், “அப்படியெனில் காலாவாதியாகிவிட்டது என்பதற்கான ஆவணங்களை நாங்கள் வழக்கு வரும்போது தாக்கல் செய்கிறோம்” எனத் தெரிவித்தார். மேலும், வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு  விசாரிக்க வேண்டும். கூடுதல் காலம் தள்ளிப்போடக்கூடாது எனக்கேட்டுக்கொண்டார்.

ஒரு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அதிகாரம் எங்களுக்கு உண்டு. எனவே, வழக்கை ஒத்திவைக்கிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள் இரு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT