நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது, இதில் அதிர்ச்சியடைந்து இருவேறு சம்பவங்களில் இரண்டு ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மைட்டி. இவர் சைக்கிள் கடை வைத்திருப்பவர். இந்தியா-நியூசிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை செல்போனில் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது டோனி ரன் அவுட் ஆனபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள கடைக்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்னொரு சம்பவத்தில், பிஹார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் அசோக் பாஸ்வான் என்ற 49 வயது ரசிகர் மேட்ச் டென்ஷனில் மூச்சடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார், அவரை மருத்துவமனைக்கு இட்டுச் சென்ற போது மருத்துவர்கள் இவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து அசோக் பாஸ்வானின் குடும்பத்தினர் கூறும்போது, இந்திய பேட்ஸ்மென்கள் ரன்கள் அடிக்கும் போது பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளார் பாஸ்வான், ஆனால் தோல்வியடையும் என்று தெரிந்த பிறகு மூச்சடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.