இந்தியா

பொருளாதார வளர்ச்சி பற்றி அவநம்பிக்கையாளர்கள் தான் கேள்வி எழுப்புகிறார்கள்: பிரதமர் மோடி விமர்சனம்

செய்திப்பிரிவு

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் அவநம்பிக்கையாளர்கள் தான் இதுபற்றி கேள்வி எழுப்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார்.

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை கட்சியின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளான இன்று நாடுமுழுவதும் தொடங்கியது. கட்சி மூத்த நிர்வாகிகள் நாட்டின் பல பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க  பிரதமர் மோடி வாரணாசி வந்தார். வாரணாசியில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது பற்றி தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருந்தது. அதனை நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய பட்ஜெட்டில்  வழிகாட்டப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகள் என்ற தொலைநோக்குடன் பொருளாதார நகர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறும். ஆனால் சிலர் இதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள். அவர்களிடம் நம்பிக்கையான எண்ணங்கள் இல்லை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT