பாஜக உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, . பலதரப்பட்ட மக்களையும் உறுப்பினராக சேர்ப்பு மூலம் பாஜக குடும்பத்தை வலிமையடைய செய்வோம் என அக்கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் அண்மையில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை கட்சியின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாளான 6-ம் தேதி நாடுமுழுவதும் தொடங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடி வாரணாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைப்பார் எனவும், தெலங்கானா மாநிலத்தில் கட்சித் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 மரங்களை பாஜக தொண்டர்கள் நட்டு பாராமரிக்க வேண்டும் என பிரதமர் மோடி அந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இதன்படி பாஜக உறுப்பினர் சேர்க்கையை இன்று நாடுமுழுவதும் தொடங்குகிறது. கட்சி மூத்த நிர்வாகிகள் நாட்டின் பல பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கின்றனர். வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் அகமதாபாத்திலும், நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி நாக்பூரிலும் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைக்கிறார். பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் நமக்கு ஊக்கமளிக்கும் தினம். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்குவோம். இதற்காக காசியில் நடக்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். பலதரப்பட்ட மக்களையும் உறுப்பினராக சேர்ப்பு மூலம் பாஜக குடும்பத்தை வலிமையடைய செய்வோம்’’ என பதிவிட்டுள்ளார்.