கொல்கத்தாவில் மெட்ரோ பயணி ஒருவர் கதவில் கை சிக்கியதையடுத்து பலியான சம்பவம் கடும் சோகங்களை ஏற்படுத்தியுள்ளது. பார்க் ஸ்ட்ரீட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சோகமான சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.
ரயில் கிளம்பும் நிலையில் நடைமேடையிலிருந்து மெட்ரோ ரயிலுக்குள் ஏற முயன்றார், அப்போது தானியங்கிக் கதவுகள் மூட இவரது கை சிக்கி கதவுக்கிடையில் சிக்கியது. ரயிலும் புறப்பட சிறிது தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் கதவுகளில் உணர் அறிதிறன் தொழில்நுட்பம் உள்ளது, ஆனாலும் அது சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
பலியானவர் சாஜல் குமார் கஞ்சிலால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கஞ்சிலாலுக்கு வயது 66. தெற்கு கொல்கத்தாவில் வசித்துவந்தார்.
கொல்கத்தா மெட்ரோ பொதுமேலாளர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.’
கொல்கத்தா மெட்ரொ நெட்வொர்க் ரயில் பிப்ரவரி 1995-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் சுரங்க ரயில் பாதை கொண்ட நகரம் என்ற பெருமை கொல்கத்தாவுக்குத்தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.