தேச விரோத, பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளை நிச்சயமாக, உறுதிபட எதிர்கொள்ள வேண்டுமெனில் தேசதுரோக சட்டம் அவசியம், எனவே அதை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பாக திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் , தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உறுப்பினர் பந்தா பிரகாஷ், தேசத் துரோக வழக்கை நீக்கும் முடிவை அரசு பரிசீலிக்கிறதா என்று கேள்வி எழுப்பினார், இதற்கு நித்யானந்த் ராய் எழுத்து மூலமாக விளக்கம் அளித்தார்.
அதாவது டி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர், ‘இது காலனிய காலச் சட்டமாயிற்றே, இப்போது நாம் சுதந்திர குடிமக்களாயிற்றே’ என்ற தொனியில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த நித்யானந்த், “தேசத்துரோகத்துக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவை நீக்கும் எண்ணமில்லை. தேச விரோத, தீவிரவாத, பிரிவினை வாத சக்திகளுக்கு எதிராக இந்த சட்டம் தேவை” என்றார்.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தேசத்துரோகச் சட்டத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்குவோம் என்று கூறியது. இதற்காக பாஜக அவர்களைக் கடுமையாகச் சாடியது குறிப்பிடத்தக்கது.