கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் பதவி விலகியுள்ளார். இதனால் ஆளும் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடாகவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரிடம் பாஜக தரப்பில் தங்கள் கட்சியை ஆதரிக்குமாறு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக்கப்பட்டனர். இதனால் குமாரசாமி அரசுக்கு தற்காலிகமாக நெருக்கடி தீர்ந்தது.
இந்தநிலையில் விஜய்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால், அனந்த் சிங் ராஜினாமா கடிதம் கொடுத்த தகவலை சபாநாயகர் ரமேஷ் குமார் மறுத்துள்ளார். தன்னை யாரும் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால் அடுத்த சில தினங்களில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என ஆனந்த் சிங் கூறியுள்ளார்.
ஆனந்த் சிங் பாஜகவில் இருந்து காங்கிரஸூக்கு வந்தவர். அவர் பல மாதங்களாகவே பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். ஆனந்த் சிங் ராஜினமா செய்தது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் கூறுகையில் ‘‘இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை தேடி வருகிறோம்’’ எனக் கூறினார்.
அவர் தற்போது பதவி விலகியுள்ளதால் ஆளும் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2018 ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக அதிக இடங்களை பெற்றபோதிலும், பெரும்பான்மை இல்லத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன.