டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2004-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற 83 பேரின் நியமனத்தை 2011-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தேர்ச்சி பெற்ற 91 பேரில் 83 பேர் விதிமுறைகளை மீறியதாகவும், விடைத்தாள் மதிப்பீட்டில் ஸ்கேலிங் முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறி தேர்வு எழுதிய சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட சில அலுவலர்கள் தரப்பு மற்றும் தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த அரசு அதிகாரிகளின் வேலையை பறிப்பது நீதியை ஏளனம் செய்வதுபோன்ற நடவடிக்கையாக இருக்கும். விடைத்தாளில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.
சில அம்சங்களை தீர்ப்பு சரியாக பரிசீலிக்கவில்லை என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதிட்டார்.
இதையடுத்து, தேர்வு எழுதிய 800 பேரின் விடைத்தாள்களையும் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்குமாறு அனில் தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.