ஹஜ் புனிதப்பயணம் செல்லும் முஸ்லிம் பயணிகள் சவுதி அரேபியாவில் இருந்து வரும் போது உடன் எடுத்துவரும் ஜம்ஜம் புனித நீரை தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சூட்கேஸ், பைகளின் எடைக்கு உட்பட்டு கொண்டுவரலாம் என்று ஏர்இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்க மெக்காவில் உள்ள ஜம்ஜம் புனித நீரை சிறிய கேன்களில் கொண்டுவந்து தருவது வழக்கம்.
ஆனால், கடந்த 4-ம்தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் ஜெட்டா நகர கிளை அனைத்து டிராவல் ஏஜென்ட்களுக்கும் கடிதம் எழுதியது. அதில் " செப்டம்பர் 15-ம்தேதி வரை விமானம் மற்றும் இருக்கை குறைவு போன்ற காரணங்களால், ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவரும் கேன்களை ஹஜ் பயணிகள் எடுத்துவர ஜெட்டா-ஹைதராபாத்-மும்பை(ஏஐ966), ஜெட்டா-கொச்சின்(ஏஐ964) ஆகிய இரு விமானங்களில் அனுமதிக்க முடியாது " எனத் தெரிவித்திருந்தது.
இந்த செய்தி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் மத்தியில் வேதனையையும், கலக்தத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்து இன்று ட்வீட் செய்துள்ளது. அதில் " ஜெட்டா-ஹைதராபாத்-மும்பை(ஏஐ966), ஜெட்டா-கொச்சின்(ஏஐ964) ஆகிய இரு விமானங்களில் பயணிக்கும் ஹஜ் பயணிகள் ஜம்ஜம் புனித நீரை கேன்களில் கொண்டுவரலாம். ஆனால், பயணிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு சூட்கேஸ், பேஸ் உள்ளிட்ட சுமைகளின் எடைக்கு உட்பட்டு இந்த ஜம்ஜம் தண்ணீர்எடையும் இருந்தால் அனுமதிக்கப்படும். எங்களின் உத்தரவு சங்கடங்களை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.