மகாராஷ்டிர மாநிலத்தில் அணை உடைந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதில் காணாமல் போன 4 பேரை தேடும்படலம் 5வது நாளாக தொடர்கிறது.
ஜூலை 3 ஆம் தேதி இரவு பலத்த மழையைத் தொடர்ந்து திவாரே அணை உடைந்தது. ஆற்றின் கரையோர தாழ்நிலையில் இருந்த கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததபோது மொத்தம் 23 பேர் காணாமல் போயினர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டதில் இறப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
இதில் காணாமல் போன மீதமுள்ள 4 பேரை தேடும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்து 5வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 லட்சம் இழப்பீடு
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். மற்றும் இவ்விழப்புகளுக்கு காரணமானவர் என நிரூபிக்கப்படும் நிலையில் அவர் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணைக்கு உறுதியளித்தார்.