சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட கருத்தடை சிகிச்சை முகாமில் 11 பெண்கள் பலியானது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் தலைநகர் பிலாஸ்பூருக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் பெண்டாரி. இங்கு நடந்த அரசு கருத்தடை சிகிச்சை முகாமில், அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 83 பெண்களில், 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 49 பேர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில், அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் ஆர்.கே.குப்தாவை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
மருத்துவர் குப்தா தான் நிரபராதி என்றும் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிலாஸ்பூர் சுகாதார அதிகாரியையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
மேலும், அறுவை சிகிச்சை முறையாகவே நடைபெற்றதாகவும், அதற்குப் பின்னர் வழங்கப்பட்ட மருந்துகள் காலவதியாகியிருந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்.கே.குப்தா கூறினார். மருந்துகளை வழங்கும்முன்னர் முறையாக சோதனை செய்திருந்தால் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
நீங்கள் ஏன் மருந்துகளை சோதிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டபோது, "மருந்துகளை பார்த்தவுடன் அவை காலவதியாகிவிட்டன என்பதை எப்படி என்னால் அறிந்துகொள்ள முடியும்.
அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. மருந்துகளை அனுப்பும் முன்னரே அவை பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் தவறுக்கு தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தன் மீது குற்றவியல் அலட்சியம் வழக்கு தொடரப்பட்டுள்ளதுபோல் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் இதே பிரிவில் வழக்கு தொடரப்பட வேண்டும்" என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை அதிக அளவில் செய்ததற்காக மாநில அரசின் பாராட்டைப் பெற்றவரே இந்த ஆர்.கே.குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.