வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியர்களை நாடு கடத்தக் கோரும் மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் வரும் ஜூலை 9-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
பாஜக ஆர்வலரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா 2017ல் தொடுத்த வழக்கின் மனுவை அவசர விசாரணையில் பட்டியலிடுமாறு கோரி சமர்ப்பித்த குறிப்பை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா அமர்வு கவனத்தில் எடுத்துக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு வரும் ஜூலை 9 அன்று விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் இடம்பெறுவதாக தீபக் குப்தா உள்ளடங்கிய அமர்வு தெரிவித்தது.
இந்தியாவில் தங்கியுள்ள 40,000 சட்டவிரோத ரோஹிங்கியா முஸ்லிம்களை அடையாளம் கண்டு நாடுகடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை உபாத்யாய் தனது மனுவில் கோரியிருந்தார்.
மேலும், ''பெரிய அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், குறிப்பாக மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து, எல்லைப்புற மாவட்டங்களின் மக்கள்தொகை கட்டமைப்பை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல், பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை கடுமையாக பாதித்து வருகின்றனர், குறிப்பாக தற்போதைய சூழ்நிலைகளில்.
மியான்மரில் இருந்து ஏஜென்ட்கள் மூலம் பெனாபோல்-ஹரிதாஸ்பூர் மற்றும் ஹில்லி (மேற்கு வங்கம்), சோனமோரா (திரிபுரா), கொல்கத்தா மற்றும் குவஹாத்தி வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமைப்பாக திரண்டிருப்பது இந்த நிலைமை நாட்டின் தேசிய பாதுகாப்பை கடுமையாக பாதிக்கிறது" என்று தனது மனுவில் அஸ்வினி உபாத்யாயா தெரிவித்துள்ளார்.