இந்தியா

குஜராத்தில் மீண்டும் சாதி வன்முறை: தலித் இளைஞர் படுகொலை

மகேஷ் லங்கா

உயர் சாதி இந்துக்களால் தலித்துகள் கொல்லப்படும் தொடர் சம்பவங்களில் மீண்டும் குஜராத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஹரிஷ் குமார் சோலங்கி (25) வர்மர் கிராமத்தில் சில நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்களன்று சோலங்கியின் மனைவி ஊர்மிளா ஸாலாவின் வீட்டருகில் மகளிர் உதவிக்குழு அவருடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே இவர்களது முன்னிலையில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோலங்கியை தாக்கிக் குத்திக் கொலை செய்ததாக அகமதாபாத் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர்.இல் பதிவு செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட 8 பேர்களில் ஒருவரைக் கூட இன்னும் போலீஸார் கைது செய்யவில்லை. இதில் சோலங்கியின் மாமனாரும் ஊர்மிளாவின் தந்தையுமான தசரதசிங் ஸாலா பிரதம குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார், இவரையும் கைது செய்யவில்லை.

கட்ச் மாவட்ட காந்திதாமைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார் சோலங்கி, ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஊர்மிளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் ஊர்மிளாவை மிரட்டி அவரை கடந்த மே மாதம் பெற்றோர் தங்கள் கிராமத்திற்கே அழைத்து வந்தனர்.

2 மாத கர்ப்பிணியான ஊர்மிளா காணாமல் போயுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சாதி ஆணவப்படுகொலை தொடர்பாக குஜராத் காங்கிரஸ் தலைவர் அகமட் படேல் கூறியதாவது:

“ஹரிஷ் சோலங்கி கொலையை கடுமையாக கண்டியுங்கள். சாதி வன்முறையும், கொலைகளும் குஜராத் பண்பாட்டின் அங்கமாகாது. இவை எங்கள் மாநிலத்திற்கு அன்னியமானவை. சமூகவிரோதச் செயல்களை ஒழிப்பதில் குஜராத் அரசு காட்டும் மெத்தனம்தான் இதற்கெல்லாம் காரணம்.

கடந்த ஜூன் மாதத்தில் சவுராஷ்ட்ரா பகுதியில் தலித் உதவி சர்பாஞ்ச் கிராமம் ஒன்றில் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT