காஷ்மீரில் ராணுவத்திற்கு எதிராக இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு தீவிரவாதிகளுக்கு அல்கொய்தா அறிவுறுத்தியுள்ளது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக தற்போது இருக்கும் அய்மான் அல் ஜவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காஷ்மீர் குறித்து பேசியுள்ளார். 'காஷ்மீரை மறக்காதீர்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:
காஷ்மீரில் போராடிவரும் போராளிகள் இந்திய ராணுவத்திற்கும், காஷ்மீர் அரசுக்கும் எதிராக ஒரே குறிக்கோளுடன் இடைவிடாத தாக்குதல்களை நடத்த வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதும், இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் தங்கள் பலத்தை அவர்கள் புரிய வைக்க வேண்டும்.
உலகளாவிய இஸ்லாமிய போரின் ஒரு பகுதியாகவே காஷ்மீருக்கான போரும் நடைபெறுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்காகவே, காஷ்மீர், பிலிப்பைன்ஸ், ஈராக், சிரியா உலகெங்கும் விடுதலை பேராட்டங்களை போராளிகள் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானை போராளிகள் நம்பக்கூடாது பாகிஸ்தான் அரசு போராளிகளை தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்துகிறது.
இவ்வாறு அதில் அல் ஜாஹாகிரி கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.