இந்தியா

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை: நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு என்.ஆர்.ஐ.க்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

இந்திய பாஸ்போர்ட் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்கு என்.ஆர்.ஐ.க்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக யு.ஏ.இ.யில் உள்ள பிரவசி பந்து ஷேமநல அறக்கட்டளையின் சேர்மன் கே.வி.ஷம்சுதீன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும் போது, “மத்திய அரசும், நிதியமைச்சரும் எடுத்துள்ள இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

ஷம்சுதீன் சுமார் அரை நூற்றாண்டாக ஐக்கிய அரபு எமிரகத்தில் வசித்து வரும் தொழிலதிபர் மற்றும் சேமிப்பு ஆலோசகராவார். இவர்தான் என்.ஆர்.ஐ.க்களுக்கு ஆதார் என்ற முன்மொழிவை மேற்கொண்டார். இது தொடர்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜைச் சந்தித்து அவர் கோரிக்கை வைத்து முயற்சி மேற்கொண்டார்.

அதாவது இந்தியாவில் குறைந்தது 180 நாட்கள் தங்கியிருந்தால்தான் ஆதார் அட்டைக்குத் தகுதி பெறும் சட்டப்பிரிவை கைவிட வலியுறுத்தப்பட்டது.  அயல்நாட்டில் வேலையில் இருக்கும் எவரும் இந்தியாவில் வந்து 180 நாட்கள் தங்க முடியாது என்பதை அவர் தன் கோரிக்கையில் விளக்கியிருந்தார்.

“இந்தியாவில் ஒவ்வொன்றுக்கும் ஆதார் அட்டைத் தேவைப்படுகிறது, குழந்தைகளின் பள்ளி சேர்ப்பு முதல், வீடு வாங்குவது, மொபைல் போன், சொத்துப் பதிவு அனைத்திற்கும் ஆதார் இல்லாமல் மிகவும் கடினமாக உள்ளது, இப்போது இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது” என்றார் ஷம்சுதின்.

SCROLL FOR NEXT