கர்நாடக மாநிலத்தில், சட்டவிரோத பசுக் கடத்தலுக்கு எதிராகவும் தட்சிணா கன்னட மாவட்டத்தில் கால்நடைகள் படுகொலை செய்யப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் இன்று (புதன்கிழமை) துணை ஆணையர்கள் அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள், பஜ்ரங் தளம் மற்றும் இந்து ஜகரான வேதிகே ஆகிய இந்து அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டன.
ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகித்து உரையாற்றிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் ஷெனாவா பேசியதாவது:
''எங்கள் அமைப்பு பசுப் படுகொலை செய்வதை கடந்த இருபதாண்டுகளாக எதிர்த்து வருகிறது. அது இன்னும் தொடரும். அண்மையில், சட்டவிரோதக் கடத்தலில் ஈடுபடும் கால்நடைக் கடத்தல்காரர்களுக்கு எதிராக நகர காவல்துறை ஆணையர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் காவல்துறையின் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம்.
வி.எச்.பி ஆர்வலர்கள் ஒருபோதும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை போலீஸாருக்கு வழங்கும்''.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெனாவா பேசினார்.
உடுப்பியில், சட்டவிரோத கால்நடைக் கடத்தல்களைத் தடுக்க நடவடிக்கை கோரி மூன்று அமைப்புகளின் ஆர்வலர்கள் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஜ்ரங்தள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரண் பம்ப்வெல் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.