புல்லட் ரயில் முக்கியமல்ல, ரயில்வே துறையில் இன்னும் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களை பணியில் ஈடுபடுத்துவது தேசத்துக்கே வெட்கக்கேடு என்று திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசினார்.
மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:
"நமக்கு புல்லட் ரயில் கொண்டுவருவது முக்கியமல்ல, ரயில்வே துறையில் இன்னும் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. இதை மறைப்பதற்காக ஒப்பந்ததாரர்களை நியமித்து அவர்கள் மூலம் இந்த செயல் நடக்கிறது. இன்னும் கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களை ரயில்வே பயன்படுத்துவது தேசத்துக்கே வெட்கக்கேடு
ரயில்வே நிலையங்களில் உள்ள அனைத்து பெயர் பலைகளிலும் உள்ள விவரங்கள் இந்தியில் இருக்கின்றன. இதற்கு பதிலாக மாநில மொழிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மாநில மொழிகளில் அறிவிப்புகள் எழுதப்பட வேண்டும்.
ஆளும் கட்சி இங்கு வந்திருப்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் ஆதலால், பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள், மொழி அனைத்தும் மாநிலமொழியில்தான் இருத்தல் வேண்டும். சமானிய மக்கள் புரிந்து கொள்வதற்கு எந்தவிதமான சிரமும்இன்றி இருத்தல் வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில் இருக்கின்றன அனைத்து திட்டங்களின் பெயர்களும் இந்தியில் இருந்தால், தமிழகத்தில் இருக்கும் என்னுடைய தூத்துக்குடி தொகுதியில் உள்ள கிராம மக்கள் எவ்வாறு திட்டத்தின் பயனை புரிந்துகொள்ள முடியும்.
பிரதமர் சதக்யோஜனா என்று திட்டத்தின் பெயர் இருக்கிறது. மொழிமாற்றம் இல்லை. எனக்கும் என்ன அர்த்தம் எனத் தெரியவில்லை. இந்த முயற்சி தமிழ் மொழியில் முக்கியத்துவத்தை குறைத்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சி.
தமிழகத்தில் ஆளும் அரசு, மக்கள் வரிப்பணத்தில் புதிய பேருந்துகளை வாங்கிவிட்டு, அதில் இந்தியில் பெயர் எழுதுகிறார்கள். ஏன் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்.
நான் இந்த அரசுக்கு சொல்லவிரும்புவது என்னவென்றால் சேலம் உருக்காலை அல்லது ரயில்வே துறையை தனியார் மயமாக்கவோ, அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவோ முயற்சித்தால், தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். திமுகவும், எங்கள் தலைவர் முக ஸ்டாலினும் எதிர்ப்பார் " எனத் தெரிவித்தார்.
மனிதக் கழிவுகளை அள்ளும்போது ஏற்படும் இறப்புகள் குறித்து தகவல்களை மத்திய அரசு வெளியிட்ட தகவலில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 1993ம் ஆண்டுமுதல் இதுவரை 620 பேர் இறந்துள்ளனர். அதில் 88 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 445 சம்பவங்களில் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட்டதாகவும், 58 சம்பவங்களில் குடும்பங்களுக்கு பகுதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும், 117 சம்பவங்களில் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 144 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, குஜராத்தில் 131 இறப்புகளும் உள்ளது. 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் பதிவான 88 இறப்புகளில் 52 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் மக்களவையில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.