நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் கள் என்று பிரதமர் நரேந் திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள இந்தூர் மாநகராட்சி பாஜக வசம் உள்ளது. பருவமழையை முன்னிட்டு மோசமான நிலையில் உள்ள ஒரு கட்டிடத்தை இடிக்க இந்தூர் மாநகராட்சி திட்டமிட்டது.
இதன்படி, கடந்த 26-ம் தேதி மாநகராட்சி அதிகாரி திரேந்திர சிங் தலைமையிலான குழு, குறிப்பிட்ட கட்டிடத்தை இடிக்கச் சென்றது. அப்போது அங்கு வந்த பாஜக பொதுச் செய லாளர் விஜய் வர்கியாவின் மகனும் இந்தூர்-3 தொகுதி எம்எல்ஏவுமான ஆகாஷ், அந்த கட்டிடத்தை இடிக்கவிடாமல் அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்தினார்.
மாநகராட்சி அதிகாரி திரேந்திர சிங்குக்கும் ஆகாஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. ஆத்திரமடைந்த ஆகாஷ், கிரிக்கெட் மட்டையால் திரேந் திர சிங்கை கடுமையாகத் தாக்கி னார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது.
புகாரின்பேரில், கைது செய்யப் பட்ட ஆகாஷ் கடந்த 30-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட் டார். அப்போது அவரது ஆதர வாளர்கள் சிறை வாயிலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவரை வரவேற்றனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங் களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்கியா கூறிய போது, "இது மிகப்பெரிய விவகாரம் கிடையாது. ஆகாஷ் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை" என்று தெரிவித்தார்.
பெயரைக் குறிப்பிடவில்லை
இதனிடையே பாஜக எம்.பி.க் கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய்வர்கி யாவும் பங்கேற்றார். இந்தக் கூட்டத் தில் ஆகாஷின் பெயரைக் குறிப்பி டாமல் அவரது செயலை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்தார். அப்போது அவர் கூறியதாவது:
யாருடைய மகனாக இருந்தா லும் குற்றம் குற்றமே. இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. இது போன்ற அநாகரிகமான செயல் களை சகித்துக் கொள்ள முடியாது. இதனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். குறிப்பிட்ட நபரை சிறை வாயிலில் வரவேற்றவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து உள்ளனர். ஆட்சி, அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத் தக் கூடாது. எம்.பி., எம்எல்ஏக்கள் ஒழுங்கீனமாக நடந்தால் கட்சித் தலைமை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிருபர்கள் அனுமதிக்கப்பட வில்லை. எனினும் பிரதமர் பேசிய விவரங்களை ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட எம்.பி.க்கள் நிருபர்களிடம் விவரித்துக் கூறினர்.
மக்களவைத் தேர்தலின்போது போபால் தொகுதி பாஜக வேட் பாளர் சாத்வி பிரக்யா சிங், நாது ராம் கோட்சே சிறந்த தேசபக்தர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கும் பிரதமர் மோடி பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.